Tuesday, September 14, 2010

அவுட்சோர்சிங் பணி தடை :அமெரிக்க அறிவித்தது

தகவல் தொழில்நுட்பத் துறையின் (ஐ.டி.,) பணிகளை இனி அவுட்சோர்சிங் அளிப்பதில்லை என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தது. அதைத் தொடர்ந்து அந்நாட்டின் ஓகையோ மாகாணம், தடை விதித்துள்ளது குறித்து, ஆந்திர மாநில முதல்வர் ரோசய்யா கவலை தெரிவித்துள்ளார்.

ஐ.டி., துறையில், வெளிநாடுகளில் உள்ள பல நிறுவனங்கள் தங்கள் வேலைகளை வெளிநாடுகளில் அந்நாட்டு பணியாளர்கள் மூலம் நடத்தி வருகின்றன. அவுட்சோர்சிங் என்ற இப்பணியில் இந்தியா குறிப்பிடத்தக்க இடம் வகித்து வருகிறது. உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குப் பின் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளது. இதையடுத்து, கொஞ்சம் கொஞ்சமாக அவுட் சோர்சிங் பணியைக் குறைத்து, உள்நாட்டு வேலை வாய்ப்பு அதிகரிக்கப்படும் என்று வாக்குறுதி அளித்து ஒபாமா ஆட்சியைப் பிடித்தார். சமீபத்தில் அவுட்சோர்சிங் குறைக்கப்படும் என்று அறிவித்தார்.  அமெரிக்க அரசின் வரிச்சலுகைகளைப் பெறும் கம்பெனிகள் தங்கள் பணிகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி அதனால் லாபம் சம்பாதிக்கின்றன. ஆனால் அமெரிக்கர்களுக்கு வேலை இல்லை. ஆகவே இப்பணிக்கு எதற்காக வரிச்சலுகை என்பது அவர் வாதம். அமெரிக்க மாகாணங்களில் ஒன்றான ஓகையோ, அரசு ஐ.டி., வேலைகள் வெளியிடப் பணிக்கு அளிக்கப்படுவதைத் தடை செய்து, உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து ஆந்திர முதல்வர் ரோசய்யா கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவில் ஐ.டி., துறையில் ஆந்திரா நான்காம் இடம் வகிக்கிறது. இங்கு அத்துறையில் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்டோர் பணிபுரிகின்றனர். கடந்த நிதியாண்டில் இத்துறை மூலம் 35 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் வந்தது. இந்நிலையில் அமெரிக்காவின் திடீர் முடிவு, ஆந்திராவைப் பெருமளவில் பாதிக்கும் என்பதால், இதுகுறித்து அமெரிக்காவுடன் கலந்து பேசி உடனடியாக ஒரு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி, வெளியுறவு அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் ஆனந்த் சர்மா, ஐ.டி., அமைச்சர் ஆ.ராஜா ஆகியோருக்கு ஆந்திர முதல்வர் ரோசய்யா கடிதம் எழுதியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: தடையற்ற வர்த்தகம் மற்றும் போட்டிகளுக்கு ஆதரவாக பேசி வருவதும் அமெரிக்கா தான். அதிபர் ஒபாமா இந்தியா வரும் வேளையில், இருதரப்பு வர்த்தகங்களுக்கு இடையில் கண்ணுக்குத் தெரியாத சில தடைகள் உருவாவது, இருதரப்பு உறவுகளுக்கான நல்ல அறிகுறியாகத் தெரியவில்லை. உலகின் முன்னணி 500 நிறுவனங்களில் பாதிக்கும் மேலானவை, இந்தியாவில் அவுட்சோர்சிங் மூலம் பணிகளை ஒப்படைத்து வருகின்றன. அமெரிக்காவின் இந்த முடிவு, ஐ.டி., துறையில் படித்த பட்டதாரிகளின் நலன்களுக்கு எதிராகத் தான் அமையும். ஆந்திர ஐ.டி., துறை லட்சக்கணக்கான இளம் பொறியாளர்களுக்கு வேலை வழங்கி வருகிறது. ஓகையோவின் இந்தத் தடை, அமெரிக்காவின் பிற மாகாணங்களுக்கும் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை என்பதற்கான அறிகுறியாகத் தான் தெரிகிறது. இவ்வாறு ரோசய்யா எழுதியுள்ளார்.

No comments:

Post a Comment