புதுடில்லி : "சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர்கள் டிபாசிட் செய்துள்ள பணம் அனைத்தும், கறுப்பு பணம் அல்ல' என, டில்லியில் உள்ள சுவிஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.
"சுவிஸ் வங்கியில் மொத்தம் 2,050 பில்லியன் டாலர் பணத்தை வெளிநாட்டவர்கள் டிபாசிட் செய்துள்ளனர். இதில் 50 சதவீதம், சம்பந்தப் பட்ட அரசாங்கத்திடம் இருந்து வாடிக்கையாளர்கள், அனுமதி பெற்று டிபாசிட் செய்துள்ளனர்' என, சுவிட்சர்லாந்து நாட்டு வெளியுறவு அமைச்சர் மிச்செலின் காமிரே, செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார். சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள மீதமுள்ள 50 சதவீத பணம், கறுப்பு பணமா என்பது குறித்து, அவர் விளக்கமளிக்கவில்லை. இந்நிலையில், சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள பணத்திற்கு, டில்லியில் சுவிஸ் தூதரகம் விளக்கமளித்துள்ளது.
இது குறித்து சுவிட்சர்லாந்து தூதர் பிலிப் வெல்தி விளக்கமளித்துள் ளார். அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: வெளிநாட்டினர் டிபாசிட் செய்துள்ள 102 லட்சம் கோடி ரூபாய் பணம் மட்டுமே சம்பந்தப்பட்ட நாட்டு அரசுகளின் அங்கீகாரம் பெறாதவை. இதனால் சுவிஸ் வங்கிகளில் டிபாசிட் செய்யப்பட்டுள்ள மொத்த பணமும், "கறுப்பு' பணம் என்ற மாயையை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவிஸ் வங்கிகளில், ஆயிரக்கணக்கான கோடி ரூபாய், இந்தியர்களின் கறுப்பு பணம், பதுக்கி வைக்கப் பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சுவிஸ் வங்கிகளில் 73 லட்சம் கோடி கறுப்பு பணத்தை இந்தியர்கள் பதுக்கி வைத்துள்ளதாக, ராஜ்ய சபா எம்.பி.,யும், பிரபல வழக்கறிஞருமான ராம் ஜெத்மலானி சமீபத்தில் புகார் கூறியிருந்தார். இந்நிலையில், சுவிட்சர்லாந்து தூதர் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment