Thursday, September 16, 2010

அயோத்தி சர்ச்சை 24 ம் தேதி தீர்ப்பு ; சமரசம் ஏற்படுத்த இன்று முக்கிய கூட்டம்

லக்னோ:
சர்ச்சைக்குரிய அயோத்தி விவகாரம் 60 ஆண்டுகளுக்கு பின்னர் தீர்ப்பளிக்கப்படுகிறது. அயோத்தியில் பாபர் மசூதி இருந்த 2 . 77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற நீண்ட கால சர்ச்சை வரும் வெள்ளிக்கிழமை ( 24 ம் தேதி ) முடிவுக்கு வருகிறது. 60 ஆண்டு காலம் நடந்து வரும் தீர்ப்பு எப்படி இருக்கும் , என்னவாக இருக்கும் , இரு தரப்பினரும் ஏற்றுக்கொள்வார்களா இல்லையேல் சமரத்தீர்வு எப்படி காண்பது என்பதில் மத்திய அரசு பெரும் அளவில் அக்கறை எடுத்து பல தரப்பு யோசனைகளையும் கேட்டு ஆலோசித்து வருகிறது.
 
தீர்ப்பு எப்படி இருப்பினும் இதனை இறுதி தீர்வாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என மத்திய அரசு தரப்பில் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது. அயோத்தியில், 1528ம் ஆண்டில் பாபர் மசூதி கட்டப்பட்டது. ஆனால், இந்த மசூதி அங்கிருந்த கோயிலை இடித்து விட்டு கட்டப்பட்டதாக, இந்துக்கள் புகார் தெரிவித்தனர். சுதந்திரத்திற்குப் பின், 1949ல் இந்த இடத்திற்கு உரிமை கோரி, இந்துக்கள் தரப்பிலும், முஸ்லிம்கள் தரப்பிலும் வழக்கு தொடரப்பட்டது. 1992ம் ஆண்டு டிசம்பர் 6ம் தேதி கரசேவகர்களால் பாபர் மசூதி இடிக்கப்பட்டதை அடுத்து, சர்ச்சைக்குரிய அந்த 2.77 ஏக்கர் நிலத்தை அரசு கையகப்படுத்திக் கொண்டது.
 
அமைச்சரவை ஆலோசனை :
சர்ச்சைக்குரிய நிலம் யாருக்கு சொந்தம் என்பது தொடர்பான வழக்கின் விசாரணை அலகாபாத் ஐகோர்ட்டின் லக்னோ பெஞ்சில், 2002ம் ஆண்டு ஏப்ரலில் துவங்கியது. வழக்கு விசாரணையின் போது, 88 பேரின் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.இவர்களில் 34 பேர் முஸ்லிம்கள்; 54 பேர் இந்துக்கள். நீதிபதிகள் மாற்றம் , ஓய்வு காரணமாக இந்த வழக்கின் விசாரணை மூன்று முறை புதிதாக துவங்கியது. இந்த தீர்ப்பு வெளியாக இருப்பதையொட்டி மத்திய அமைச்சரவை நேற்று ( வியாழக்கிழமை ) கூடி விவாதித்தது. இந்த ஆலோசனைக்கு பின்னர் அரசு தரப்பில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு விளம்பரமாக வெளியிடப்பட்டுள்ளது.
 
அமைதி காத்திட வேண்டுகோள்:
இந்த விளம்பரத்தில் மக்கள் அனைவரும் அமைதி காக்க வேண்டும், யாரும் யாரையும் புண்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள கூடாது. வரும் தீர்ப்பு முடிவானதல்லை , இதில் ஏற்றுக்கொள்ள முடியாத எந்த ஒரு தரப்பினரும் இந்த விஷயத்தில் இறுதியான முடிவு என கருத வேண்டாம். அனைவரும் அமைதி காத்திட வேண்டும். என கூறப்பட்டுள்ளது.
 
இதற்கிடையில் அலகாபாத்தில் கோர்ட் வளாகத்தில் நீதிபதிகள் கொண்ட ஒரு சமாதான கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இருக்குமாறு மாநிலம் முழுவதும் உள்ள போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அயோத்தியில் பலத்த பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
தீர்ப்பு ஒத்திவைக்ககோரி மனு : 
இந்த வழக்கின் தீர்ப்பின் காரணமாக நாட்டில் சட்டம் ஒழுங்கு பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. காமன் வெல்த் போட்டி நடைபெற இருக்கும் இந்த நேரத்தில் தீர்ப்பு வெளியானால் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே வரும் 24 ம் தேதி தீர்ப்பை வெளியிடாமல் வேறு தேதிக்கு மாற்ற வேண்டும் என பொது நல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை இன்று நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment