Thursday, September 9, 2010

ஜாதி வாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு ரூ.2,000 கோடி செலவு

சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக, ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரை இந்த ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும். கணக்கெடுப்பிற்கு, மத்திய அரசுக்கு, 2,000 கோடி ரூபாய் செலவாகும்.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன், 1931ம் ஆண்டில் முதன் முறையாக ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. சுதந்திரம் அடைந்த பின், இந்த நடைமுறை கைவிடப்பட்டது. சில மாதங்களுக்கு முன், மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி துவங்கியது. அப்போது, மக்கள் தொகை கணக்கெடுப்போடு ஜாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த வேண்டும் என, முக்கிய அரசியல் கட்சிகளும், சமூக அமைப்புகளும் மத்திய அரசை வலியுறுத்தி வந்தன. இரு வேறு கருத்துகள் நிலவியதால் மத்திய அமைச்சர்கள் அடங்கிய உயர் மட்டக்குழுஅமைக்கப்பட்டது. இந்நிலையில், ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்துவது என, மத்திய அமைச்சரவை நேற்று தீர்மானித்தது. இதை, மத்திய உள்துறை அமைச்சர் சிதம்பரம், அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அவர் கூறியதாவது: கடந்த 1931ம் ஆண்டுக்கு பின், முதன்முறையாக, சுதந்திர இந்தியாவில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கவுள்ளது. தற்போது நடைபெறும் மக்கள் தொகை கணக்கெடுப்பு, அடுத்த ஆண்டு பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் முடியும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு, ஜாதி வாரி கணக்கெடுப்பை நாடு முழுவதும் துவக்க அரசு முடிவெடுத்துள்ளது. அடுத்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கி, பல்வேறு கட்டங்களாக இது நடைபெற்று, செப்டம்பர் மாத இறுதிக்குள் முடிக்கப்படும். இந்த கணக்கெடுப்பை சென்சஸ் கமிஷன் நடத்தி முடிக்கும். ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்தும்போது, எந்த மாதிரியான அணுகுமுறையை கடைபிடிப்பது, மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும் ஜாதிகளை எவ்வாறு பட்டியல் இடுவது என்பன குறித்து, சென்சஸ் கமிஷன் மற்றும் சட்ட அமைச்சகத்தின் ஆலோசனைகள் பெறப்படும்.

ஊர் ஊராக சென்று எடுக்கப்படும் ஜாதிவாரி கணக்கெடுப்பையும், அங்கிருந்து பெறப்படும் விவரங்களையும், ரிஜிஸ்ட்ரர் ஜெனரல் மற்றும் சென்சஸ் கமிஷன் அலுவலகம் தீவிரமாக கண்காணிக்கும். இறுதியாக, இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து பட்டியல் வாரியாக ஜாதிகளை பிரிக்கவும், வகைப்படுத்தி முறைப்படுத்தவும் வல்லுனர் குழுவை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது, என்றார். இதற்கு ரூ. 2,000 கோடி செலவாகும். தற்போது நடந்து வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பிற்கு 2,200 கோடி ரூபாய் செலவாகும் என, ஏற்கனவே மதிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment