Tuesday, August 31, 2010

பொள்ளாச்சி அருகே அரியவகை எறும்பு தின்னி பிடிபட்டது


பொள்ளாச்சி : பொள்ளாச்சி அருகே விவசாய நிலத்தில் இருந்த அரிய வகை எறும்பு தின்னி மீட்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது. பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை கெங்கம்பாளையத்தில் கோபால் என்பவரின் வீடு அருகில் விவசாய நிலத்தில் அரிய வகை எறும்பு தின்னி ஊர்ந்து சென்றுள்ளதை பார்த்துள்ளனர்.

வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததும், பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் வீரமணி மற்றும் வனத்துறை அதிகாரிகள் அங்கு சென்று எறும்பு தின்னியை மீட்டனர். பொள்ளாச்சி வனச்சரக அலுவலகத்தில் வைத்திருந்த எறும்பு தின்னியை, சர்க்கார்பதி செக்போஸ்ட் வனப்பகுதியில் விடுவித்தனர். வனச்சரக அலுவலர் கூறுகையில், ""அரிய வகை எறும்பு தின்னி வனப்பகுதியில் அதிகளவில் உள்ளது. வனத்தில் அதிகளவில் காணப்படும் இவை கரையான், எறும்பு, சிறிய பூச்சிகளை உணவாக உட்கொள்ளும். ஆனைமலை அருகே மீட்கப்பட்ட எறும்பு தின்னிக்கு எட்டு முதல் 10 வயதுக்குள் இருக்கும்; ஒரு மீட்டர் நீளம் உள்ளது. எறும்பு தின்னி 30 வயது வரை வாழக்கூடியது. மனித நடமாட்டம் இருந்தால் உறுப்புகளை சுருட்டிக்கொண்டு பந்து போன்று மாறி விடும் தன்மை கொண்டவை. மீட்கப்பட்ட எறும்பு தின்னியை சர்க்கார்பதி ஆயிரம்கால் பீட் அருகில் விடுவித்துள்ளோம்'' என்றார்.

No comments:

Post a Comment