Wednesday, January 26, 2011

முல்லை பெரியாறில் புதிய அணை : மத்திய சுற்றுச்சூழல் குழு ஆய்வு

                     திருவனந்தபுரம் :
                                       ""முல்லை பெரியாறில் புதிய அணை கட்டுவதற்காக, புலிகள் சரணாலய வனப்பகுதியை அளிப்பது குறித்து, மத்திய அரசு நியமிக்க உள்ள மூன்று பேர் கொண்ட சுற்றுச்சூழல் குழு ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்,'' என, தேசிய புலிகள் சரணாலய கழக உறுப்பினர் டாக்டர் ராஜேஷ் கோபால் தெரிவித்தார்.
                சபரிமலை அருகே புல்மேடு பகுதியில், 14ம் தேதி ஏற்பட்ட துயர சம்பவத்தை தொடர்ந்து, அப்பகுதியை தேசிய புலிகள் சரணாலய கழக உறுப்பினர் டாக்டர் ராஜேஷ் கோபால் பார்வையிட்டார். பிறகு அவர், முல்லை பெரியாறு பகுதியில் கேரள அரசு கட்ட திட்டமிட்டுள்ள புதிய அணை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.
                   நேற்று, நிருபர்களிடம் அவர் கூறியதாவது: முல்லை பெரியாறில் கேரள அரசு, புதிய அணை கட்ட திட்டமிட்டுள்ளது. அதற்காக, புலிகள் சரணாலய வனப்பகுதியில் நிலம் வழங்க கோரி வருகிறது. இதுகுறித்து ஆராய மத்திய அரசு நியமிக்க உள்ள மூன்று பேர் கொண்ட சுற்றுச்சூழல் குழு, நேரில் அப்பகுதியை ஆய்வு செய்யும். அங்கு புதிய அணைக்கட்டுவதற்கு வனப் பகுதியை மாநில அரசுக்கு அளிக்கலாமா என்பது குறித்து, அக்குழு தான் முடிவு செய்யும். அதன்பின் அக்குழு, மத்திய அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யும். இவ்வாறு ராஜேஷ் கோபால் கூறினார்.
                   தமிழக அரசு, "இங்கு புதிய அணை கட்டக் கூடாது' எனக் கூறி, சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்நிலையில், அப்பகுதியில் சுற்றுச்சூழல், அங்கு பாதுகாக்கப்படும் புலிகள், வன விலங்குகள் ஆகியவற்றுக்குப் பாதிப்பு போன்ற, பல்வேறு அம்சங்கள் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு கமிட்டி அமைக்கவுள்ளது, தமிழக விவசாயிகளுக்கு ஆறுதலை தந்துள்ளது.

No comments:

Post a Comment