நாளை பொங்கல் திருவிழா. கண்கண்ட தெய்வமான கதிரவனுக்கு, இந்நாளில் முறைப்படி பொங்கலிட்டால் அவரது நல்லருளைப் பெறலாம்.
பொங்கலை வீட்டு வாசலில் வைப்பதே சிறப்பாகும். ஒரு கோலமிட்ட பலகையை வீட்டு வாசலில் வைத்து அதன் மேல் திருவிளக்கை வையுங்கள். பூ சூட்டுங்கள். வெளியே காற்றடிக்கலாம் என்பதால் விளக்கு ஏற்ற வேண்டும் என்ற அவசியமில்லை. நிறை விளக்காக வைத்தால் போதும். விளக்கின் முன் பெரிய வாழை இலையை விரித்து, முதலில் சாணப்பிள்ளையாரை ஒரு ஓரமாகவும், செம்மண்ணைப் பிடித்து அம்பாளாகக் கருதி பிள்ளையார் அருகிலும் வையுங்கள். இலையில் பச்சரிசி பரப்புங்கள். பிறகு, கிழங்கு, காய்கறிவகைகள், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு படைக்கவேண்டும். இரண்டு கரும்புகளை தோகையுடன் சுவரில் சாய்த்து வையுங்கள். பச்சரிசி, வெல்லம், பழம், தேங்காய்ப்பல் சேர்த்து தயாரிக்கும் காப்பரிசியை ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.
பச்சரிசி களைந்த நீரை தயாராக வைத்துக் கொள்ளவும். பானையில் மஞ்சள் குலை கட்டி அடுப்பில் வையுங்கள். ஒரு தேங்காயை உடைத்து அதிலுள்ள தண்ணீரை பானையில் விடுங்கள். சூடம் ஏற்றி அடுப்பு பற்ற வையுங்கள். பனை அல்லது தென்னை ஓலை கிடைத்தால் அதைக் கொண்டு அடுப்பு எரிக்கலாம். கிடைக்காதவர்கள் சுள்ளி விறகுகளைப் பயன்படுத்தலாம். கூடுமானவரை மண்ணெண்ணெய் விட்டு அடுப்பு பற்ற வைப்பதைத் தவிர்க்கவும். காய்ந்த விறகுகளைத் தேர்ந்தெடுங்கள். பச்சரிசி களைந்த நீரை பானையில் ஊற்றவும். தேவையானால், சிறிதளவு பசும்பால் சேர்க்கலாம். தண்ணீர் கொதித்து பொங்கியஉடன், குலவையிடுங்கள். குலவை தெரியாதவர்கள் "பொங்கலோ பொங்கல்' என்று முழங்கலாம். கொதித்த தண்ணீரை, எவ்வளவு அரிசி சமைக்க இருக்கிறோமோ அந்தளவுக்கு முகர்ந்து எடுத்து விட்டு பச்சரிசியை இடுங்கள். நேரம் செல்லச் செல்ல எரிபொருளின் அளவைக் குறைத்து விடுவது அவசியம். இல்லாவிட்டால், சாதம் பானையில் பிடிக்கும்.
பொங்கல் தயாரானதும் இறக்கி விடுங்கள். பின்பு, அதே அடுப்பில் சர்க்கரைப் பொங்கல் தயார் செய்து விடுங்கள்.பொங்கல் பானைகளை விளக்கின் முன் வைத்து, பூஜை செய்யுங்கள். சூரியனுக்குரிய ஆதித்ய ஹ்ருதய ஸ்தோத்திரம், பிற ஸ்லோகங்கள், பாடல்களைப் பாடுங்கள். பின்னர், இவற்றை வீட்டுக்குள் எடுத்துச் சென்று விடலாம். முதலில், பொங்கல், பழம் ஆகியவற்றை ஒரு இலையில் வைத்து காகத்துக்கு வைக்க வேண்டும். மதிய வேளையில், காய்கறி சமைத்ததும், திருவிளக்கேற்றி, ஒரு இலை விரித்து பொங்கல், சர்க்கரைப் பொங்கல், காய்கறி வகைகளை இலையில் வைக்க வேண்டும். அதை முன்னோருக்கு சமர்ப்பித்து பூஜை செய்ய வேண்டும். அவர்களின் ஆசியைப் பெற்ற பிறகு, இதன்பிறகு, குடும்பத்தார் ஒன்றாக அமர்ந்து பொங்கல் சாப்பிட வேண்டும். வெறுமனே "டிவி' பார்ப்பது மட்டும் பொங்கலன்று செய்யும் பணியல்ல. இப்படி, பொங்கலிட்டு பாருங்கள். சூரியதேவனின் அருள்பெற்று நலமுடன் வாழ்வீர்கள்.
No comments:
Post a Comment